இளங்கன்று.......!
அஜிதா கணினி மேல் இருந்த கண்களை அவள் கைபேசி மேல் செலுத்தினாள். அது மெளனமாக சிணுங்கியது .காலர் ஐடி யில் 'மைக்ரோசாப்ட்' என்று இருந்தது,உடனே அஜிதா எழுந்தாள் தன்னோடு ஒரே ரூமில் தங்கிய இரு தமிழ் பெண்களிடம் மௌனமாக முறுவலித்து ,தன் ஓவர் கோட்டை அணிந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரின் டிசம்பர் மாத குளிரையும் பொருட்படுத்தாமல் ,வெளியே நடக்கலானாள்.அவர்கள் இருந்தது புகழ்பெற்ற 'யூனிவர்சிட்டி ஒப் டெக்சாஸ் ' பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அபார்ட்மெண்ட் .
இந்த டெலிபோன் காலுக்காக ஒரு வாரமாக காத்துக் கொண்டிருந்தாள் அஜிதா. இது அமெரிக்காவில் புகழ் பெற்ற மிக பெரிய நிறுவனமான மைக்ரோசாப்ட்,அவளது திறமையை அங்கீகரித்து அவளை இன்டெர்வியூவுக்கு அழைத்திருந்தார்கள் . போன வாரம் சியட்டில் நகரம் சென்று ஒரு நாள் முழுவதும் இன்டெர்வியூ செய்தாள் , லஞ்ச் இன்டெர்வியூ ,குரூப் இன்டெர்வியூ என்று பல வகையான இன்டெர்வியூக்கள். அனைத்தையும் தன் திறைமை முழுவதும் பயன்படுத்தி சிறப்பாக செய்து முடித்தாள். அந்த இண்டெர்வியூவின் முடிவை பற்றிய கால் தான் இந்த டெலிபோன் கால்.அந்த பக்கம் இருந்த பெண் ,ஆங்கிலத்தில் , 'கங்கிரதுலேஷன்ஸ் அஜிதா !, நீங்கள் போன வாரம் நடந்த இன்டெர்வியூவில் வெற்றி பெற்றிர்கள் . ஜனவரி 4 ஆம் தேதி வேலையில் சேருங்கள். மற்ற விவரங்கள் ஈமெயில் செய்யப்படும் , மறுபடியும் வாழ்த்துக்கள் ' என்று சொல்லி முடித்து காலை கட் செய்தாள்.
அஜிதா முகத்தில் மௌனமான புன்னகை. இன்னும் ரூமில் இருக்கும் தன் தோழிகளிடம் தான் மைக்ரோசாப்ட்டில் இன்டெர்வியூ செய்தது சொல்லவில்லை.அக்கா வீட்டிற்கு செல்வதாக சொல்லி தான் சியட்டில் சென்றாள்.முடிவு தெரியாமல் யாருடனும் பேச வேண்டாம் என்று நினைத்தாள்.ஆனால் அஜிதா முறுவலித்தது தோழிகளிடம் சொல்வதற்காக இல்லை . பல ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்த இந்தியாவில் இருக்கும் தாய் தந்தை இடம் சொல்வதை பற்றித்தான். அஜிதா இருந்த அபார்ட்மென்டுக்கு வெளியில் ஒரு பெரிய கால் பந்து மைதானம். அங்கே காலேஜ் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தார்கள், மாலை நேரம் , அஜிதா ரூமுக்கு போக விருப்ப படாமல் மைதானத்தை சுற்றிய வாறே இந்த இரண்டு ஆண்டுகள் நடந்த வற்றை அசை போட்டாள்
அஜிதாவின் குடும்பம் நல்ல உழைப்பாளிகள் , உழைப்பின் பயனால் நல்ல செல்வந்தர்கள். அம்மா ,அப்பா இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ,அம்மா ,பெண்கள் கல்லூரியில் ப்ரோபெஸோர் ,அப்பா, சொந்த காலில் உழைத்து முன்னேறிய பிசினஸ் மேன் ,அபிதா ,அஜித்தா என்று இரு சகோதரிகள் . அக்கா , அபிதா மிகுந்த புத்திசாலி மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று ,நல்ல கல்லூரியில் படித்து,அமெரிக்கா வந்து ,இதே மைக்ரோசாப்ட்டில் பனி புரிகிறாள். தங்கை அபிதாவும் அக்காவுக்கு சளைத்தவள் இல்லை. இன்ஜினீரிங் மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே அமெரிக்கா வர வேண்டும் என்று ஆசைப் பட்டாள் அஜிதா . அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது அம்மாதான்.'அஜி குட்டி இந்த அமெரிக்கா ஆசை வேண்டாம்டா ,கண்ணு!' ,என்று கெஞ்சுவாள் ,கொஞ்சுவாள் ,அதட்டுவாள் . 'உன் அக்கா கல்யாணம் தள்ளி போகும் காரணம் இதுதான் மா ' ,என்று சொல்லுவாள் அதற்கு அஜித்தா 'அம்மா , நீங்கள் எங்களை ஒழுக்கமான ,நேர்மையான ,உழைப்பாளியான பெண்களாக வளர்த்துளீர்கள் ,அது போதாதா' என்று மறுவாதமிடுவாள் .கடைசி ஆண்டு நல்ல பன்னாட்டு நிறுவனத்தில் கேம்பஸ் இன்டெர்வியுவில் தெறிச்சி பெற்றாள், அஜிதா .அந்த பன்னாட்டு நிறுவனம் சொந்த ஊரிலேயே இருந்ததால் ,அஜிதா வேலைக்கு போய்க்கொண்டே அமெரிக்கா செல்வத்திறகான நுழைவு தேர்வு எழுதுவதற்கு படிக்க ஆரம்பித்தாள் .இன்னும் அம்மாவின் அனுமதி கிடைக்கவில்லை, அப்பா சரி என்று சொல்லிவிட்டார்.
இந்நிலையில் அக்கா ,அபிதாவின் திருமணம் முடிவாகி நல்ல படியாக நிறைவேறியது . அஜிதா 'யூனிவர்சிட்டி ஒப் டெக்சாஸ் ' பல்கலை கழகத்தில் அட்மிஷன் பெற்றாள். ஆகஸ்ட் 26 ஆம் தேதி அமெரிக்காவில் இருக்க வேண்டும் . அம்மா இன்னும் அனுமதி தரவில்லை . வாதம், மறுவாதம் என்று அம்மாவுக்கும் ,சின்ன மகளுக்கும் ரகசியமாக ,கல்யாண வேலைக்கு நடுவே நடந்து கொண்டிருந்தது.
அம்மாவின் அனுமதி இல்லாமல் அமெரிக்கா செல்வது இல்லை என்று அஜிதா தெளிவாக இருந்தாள்.அம்மாவுக்கு இஷ்ட தெய்வம் குருவாயூரில் இருக்கும் குழந்தை கிருஷ்ணன். அம்மாவுக்கு மட்டும் இல்லை அஜிதா குடும்பத்தில் அனைவருக்குமே அந்த குருவாயூர் அப்பனே இஷ்ட தெய்வம். அக்கா அபிதாவின் திருமணம் முடிந்து மாப்பிள்ளை ,பெண் இருவரையும் அழைத்துக்கொண்டு குடும்பபமாக குருவாயூர் சென்றார்கள்.
கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் பெரிய வரிசையில் நின்றிருந்தார்கள்.அம்மாவால் வெகு நேரம் நிக்க முடியவில்லை ,அஜிதா மடியில் அருகில் இருந்த மண்டபத்தில் படுத்து கொண்டிந்தார். அம்மாவுக்கும்,அஜிதாவுக்கும் இந்த அமெரிக்கா பிரச்சனை மீண்டும் வெடித்தது. 'அபி குட்டி நீ போய் விட்டால் யார் என்னை பாத்து கொள்வார்கள்?' அதற்கு அஜிதா ,' அம்மா அதற்காக நான் படிக்க கூடாதா ?' என்று மறு வாதம் செய்தாள் .மற்ற குடுமத்தினர் அனைவரும் வரிசையில் நின்று இருக்க ,இவர்கள் இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்தனர். அம்மாவின் பொறுமை இறங்கிக் கொண்டே இருந்தது ,சரியாக அவர்கள் சண்டை தொடரும் முன், மற்ற குடும்பத்தினரின் வரிசை குருவாயூர் கருவறை வாசலை அடைந்ததும்,இவர்களை அழைத்தனர் . அஜிதாவும் , அம்மாவும் அந்த குட்டி கிருஷ்ணன் முன் நின்றனர். அஜிதா மறுபடியும் தொடர்ந்தாள் . அம்மா ஒரு நிமிடம் குருவாயூர் அப்பனை பார்த்தாள் , அஜிதாவை பார்த்தாள் , ' என்னை பார்த்து கொள்ள குருவாயூர் அப்பன் இருக்கிறான், நீ போ ' என்று அழுத்தத்துடன் சொன்னாள் . அஜிதா கண்ணில் கண்ணீர் .
அதற்கு பிறகு நடந்தது அனைத்தும் கனவு போல் இருந்தது அஜிதாவுக்கு. அமெரிக்கா வந்தாள் , சிறப்பாக படித்தாள் , இப்போது வேலையும் வாங்கிவிட்டாள் . அந்த சம்பவத்தை நினைக்கும் பொழுது அஜிதாவுக்கு இன்னும் அழுகை வந்தது.ஏதோ ஞாபகம் வந்தது போலெ சிறிது நேரம் நடந்தாள் , மழை பெய்ய ஆரம்பித்தது , ' அம்மா அம்மா என்னை மன்னித்து விடு ,என்னை எவ்வளவு அருமையாக வளர்த்தாய் ,உன்னை உன் முதுமையில் விட்டு வந்தேனே என்னை மன்னித்து விடு ' என்று மனம் அழுதது , இந்தியாவிற்கு டெலிபோன் செய்தாள் , ' அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் ' என்று அழுதாள் , அம்மாவின் இனிமையான குரல் ' உலகின் மிக பெரிய நிறுவனத்தில் மிக உயர்ந்த வேலை வாங்கி இருக்கிறாய், எதற்கு கண்மணி அழுகிறாய்?' என்று கேட்டது!அஜித்தாவின் அழுகை அன்று இரவு முழுவதும் தொடர்ந்தது!
Comments
Post a Comment